Oct 13, 2013

அந்தரத்தில் விரியும் கனவு

அந்தரத்தில் விரியும் கனவு
வழிப்போக்கர்களுக்கு நடுவே...
உயிரைப் பணயம் வைக்கிறேன்...
தினம் தினமும்...
வயிற்றுப் பிழைப்புக்காக...

என் வயதுச் சிறுமி
பள்ளிச்சீருடையோடு வந்து
சில்லரை போட்டுச் செல்கிறாள்...

அந்தரத்தில் நடக்கிற போது
வான் வெளியின் வெகுதொலைவில்
விமானம் கடந்து செல்கிறது...
என் விண் கனவு வானத்தில் பயணப்பட
நான் வீதிவீதியாய் பயணப்படுகிறேன்...

பசியோடு திசைதிசையாய் பயணிக்கும்போத
பாரதியின் கவிதைகள் எங்கிருந்தோ கேட்கிறது...
சுமக்கும் பாரம் முதுகை அழுத்தும்,
வலியைத் தவிர எனக்கு வேறெதும் தெரியாது

கடக்கும் நாளெல்லாம்
கனவிலிருந்து வெகுதொலைவாய்
விலகி விலகிச் செல்வதாய்
வெறுப்போடு உணர்கிறேன்

ஒரு நாள் ஏன் பிறந்தேன் என்று
என்னை நானே கேட்டுக்கொண்டால்
வாழாமலேயே சாகத்தான் என்கிற
பதிலோடு - என் கனவு
கண்களுக்குள்ளிருந்தே மறைந்திருக்கும்...
உலகில் நான் பார்த்த
வெறும் நான்கு தெருக்களுள் ஒன்றில் தான்
நானும் மடிந்துபோயிருப்பேன்...
விடைதெரியாமலேயே...
-தமிழ் வசந்தன்