Oct 6, 2015

சிலர் வாழப் பலர் சாகும் பூமி



வாய்ப்பிழந்த இளைஞர்களெல்லாம்
வழியிழந்து பசிக்கிறையாகும்
ஒரு நாள் வரும்....

எத்தனை உருண்டு புரண்டாலும்
சகவாழ்வை அடையமுடியாது
என்ற நிலை வரும் போது
தாம் நிர்க்கதிக்காளாக்கப்பட்டதன்
உண்மை புலனாகும்.

வயிறெரியச் சுயத்தை சூரியன் சுடும்போது
வாய்ப்பை அபகரித்துக்கொண்ட கயவர்களின்
உண்மை முகம் கைகொட்டிச் சிரிக்கும்...

காப்பாற்ற வழியின்றி
இறந்த உறவுகளும், இழந்த உறவுகளும்...
மனசாட்சியை உலுக்கும் தருவாயில்...
சூட்சிக்குள் சிக்க வைத்த
சூத்திரதாரியின் பெயர் விரியும்....

அயலான் விட்டெரிந்த
காசைக் கவ்விக்கொண்ட
அரசியல் கட்சிகளெல்லாம்
அடியோடு கவிழ்ந்துபோகும்....

அன்று - Brand-கள் பொடிபொடியாகும்....

அந்நியர் தொழிலகங்கள்
சாமானியர்கள் கரங்களால்
சிதறுண்டுபோகும்...

சொந்த நிலத்தின் வேர்வரை நீர் உறிஞ்சி
கோடிகோடியாய் குளிர்பானம் விற்றவர்கள்
வீதவீதியாய் விரட்டியடிக்கப்படுவார்கள்....

ஒற்றை ரூபாயையும் சாமானியனிடம்
விட்டுவைத்துவிடக்கூடாது என்கிற
கொத்தடிமை சூத்திரத்தின்
அதிபதிகள் அனைவரையும்

பொதுமக்கள் புடைசூழ
போக்கிடம் ஏதுமின்றி
வகையாய் வரிந்துகட்டி
நையப் புடைவார்கள்.

கீழ்வானம் சிவக்கும்....

பூமி எதிர்த்திசையில் சுழலும்....

தனி மனிதன் தன்
சந்தைப்படுத்தும் உரிமையை
மறுபடியும் தனக்கென மீட்டெடுப்பான்.

சொந்த மண்
சொந்த மாந்தர்களுக்கானாதாய் மாறும்...

சமத்துவம் சர்வமும் நிலைகொள்ளும்....

உலகம் தழைக்கும்!

ஊர் விளங்கும்!

ஏழை மகற்கும்
மூவேளை வயிறாரும்!

-தமிழ் வசந்தன்