Oct 13, 2013

அந்தரத்தில் விரியும் கனவு

அந்தரத்தில் விரியும் கனவு
வழிப்போக்கர்களுக்கு நடுவே...
உயிரைப் பணயம் வைக்கிறேன்...
தினம் தினமும்...
வயிற்றுப் பிழைப்புக்காக...

என் வயதுச் சிறுமி
பள்ளிச்சீருடையோடு வந்து
சில்லரை போட்டுச் செல்கிறாள்...

அந்தரத்தில் நடக்கிற போது
வான் வெளியின் வெகுதொலைவில்
விமானம் கடந்து செல்கிறது...
என் விண் கனவு வானத்தில் பயணப்பட
நான் வீதிவீதியாய் பயணப்படுகிறேன்...

பசியோடு திசைதிசையாய் பயணிக்கும்போத
பாரதியின் கவிதைகள் எங்கிருந்தோ கேட்கிறது...
சுமக்கும் பாரம் முதுகை அழுத்தும்,
வலியைத் தவிர எனக்கு வேறெதும் தெரியாது

கடக்கும் நாளெல்லாம்
கனவிலிருந்து வெகுதொலைவாய்
விலகி விலகிச் செல்வதாய்
வெறுப்போடு உணர்கிறேன்

ஒரு நாள் ஏன் பிறந்தேன் என்று
என்னை நானே கேட்டுக்கொண்டால்
வாழாமலேயே சாகத்தான் என்கிற
பதிலோடு - என் கனவு
கண்களுக்குள்ளிருந்தே மறைந்திருக்கும்...
உலகில் நான் பார்த்த
வெறும் நான்கு தெருக்களுள் ஒன்றில் தான்
நானும் மடிந்துபோயிருப்பேன்...
விடைதெரியாமலேயே...
-தமிழ் வசந்தன்

Oct 12, 2013

திலீபன்களே திரண்டெழுங்கள்

திலீபன் உரை - Dhileepan Speech

திலீபன்களே திரண்டெழுங்கள் - Dhileepangale Thirandelungal

தியாகி திலீபன் - Dhileepan Sacrifice

தலீபனுக்குத் தலைவர் பிரபாகரன் அஞ்சலி - Leader Prapakaran Anjalai to Dhileepan
ஒரு திலீபனை விதைத்து
ஓராயிரம் தலீபன்கள் எழுந்திருக்கிறோம்
அறப்போர் மறவர்களாய்
திசையெங்கும் திரண்டிருக்கிறோம்

ஈழத்து நீதிவேண்டி
இரவுபகல் முழித்திருக்கிறோம்
நெஞ்சில் தீத்தழல
நகராது நிலைத்திருக்கிறோம்

விண்முட்டும் கோசங்கள் - எங்கள்
வினவுக்கு விடைகொடுக்கும்
ஈழப்போர் தியாகங்கள் - எங்கள்
உணர்வுக்குத் துணையிருக்கும்

சிங்களன் கொடூரத்தை
உலகுக்கு வெளிப்படுத்தும்
சிதைவுண்டத் தமிழினத்தின்
விடிவுக்கு வழிவகுக்கும்

மாணவச் சமுதாயம்
முன்வந்து குரல்கொடுக்கும்
முடக்கும் சதிகளுக்கும்
மடங்காது பதில்கொடுக்கும்

தமிழீழம் வெல்லாமல்
தீராது தாகம் - எம்
போருக்கு விடையின்றி
ஓயாது கோசம்

தமிழர் தாகம்
தமிழீழத் தாயகம்


திரண்டெழும் இன்னுமோர் திலீபனாய்...
- தமிழ் வசந்தன்

Oct 11, 2013

வீரப்புலி மங்கையரும், அப்பாவித் தமிழனின் கண்ணீரும்...

அம்மாமாரே...
அக்காமாரே...
தங்கமாரே...
மங்கமாரே...


சொந்தக்கொடியே..
போராளி உசுரே...
ஆறாத நெருப்பே...
தன்மானப் பொறப்பே...


சிங்களப் பிசாசுன்ன...
கதறச் செதச்சப்ப...
கையாளாகாம
கைவிட்டுப் போனேனே


அரசியல் களவாணிச்
சூதாட்டச் சுழலுள்ள
அப்பாவித் தமிழனா
அகப்பட்டுப் போனேனே


தோட்டாத் தொளச்செடுத்து...
ரத்ததந் தெரிச்சோட - நீ
விலியாலழுதப்ப
வக்கத்துப் போனேனே...


ஆறுதலுக்கும் ஆளத்து
அநாதையாத் துடிச்சப்ப
கொர கொடுக்க ஏலாம
கதியத்துப் போனேனே

அடிவயிறு எரியுதடி...
இனங்காத்த மகராசி...
ஈனப் பொறப்பா - நான்
இருந்தத நெனக்கையில...


வீரத் திருமகளே...
சாகத் துணிஞ்சவளே...
தியாகி உனக்கிந்த
பாவியாலென்ன பயன்...


சொல்லியழும் போது...
சொர்க்கம் பார்த்திருப்ப...
உனக்குன்னு அழுதப்ப
ஒரு நாயும் வாரலையே...


குண்டு தொளச்சுச்சோ...
குழிக்குள்ள பொதச்சுச்சோ...
ரத்தம் வெதச்சவளே...
நெஞ்சு வலிக்குதடி...


அரசும் தொறத்துச்சு...
நாடும் தொறத்துச்சு...
எங்கக் கதறலெல்லாம்...
யாருக்குக் கேட்டுச்சு...


தேர்தல் வருகேல...
ஒவ்வொரு மொறையும் - இங்க
ஓட்டுக்கு உனக்கொண்டு
சூதாட்டம் நடந்துச்சு...

அத்தோடு முடிஞ்சுச்சு...
அத்தனை வாக்குகளும்...
இப்போதும் உனக்கங்க...
நலமென்ன நடந்துச்சு...


உன்னோடு களங்காணும்
கொடுப்பனையும் எனக்கில்ல
இனிமேலும் உனக்காண
ஒரு போதும் வழியில்ல...


ஆனா உனக்கொன்ன
உறுதியா ஒரப்பேனே...
களத்தில நீ நின்ன
வழி நின்னு உழைப்பேனே...


புலியா புகுந்தாடி
புதிரான தமிழீழம்
அடையும் வர நானும்
அசாரா திருப்பேனே


அரசே வதச்சாலும்...
ஆள் வெச்சு செதச்சாலும்...
உசுரோட பொதச்சாலும்...
ஊர்முன்ன எரிச்சாலும்...


வழுவா திருப்பேன் - உன்
வழியில் நடப்பேனே
தொணையா இரு தாயே...
துணிவோ டெழுகின்றேன்

வீரப்புலிச் சகோதரிகளுக்கான கண்ணீர அஞ்சலியுடன்,
- தமிழ் வசந்தன்