![]() |
அடுக்கடுக்கடுக்காய் ஆங்கிலம் பேசும் கறுப்புத் தமிழச்சி வேண்டும். இழுத்து மூடிய இரும்புத் திரையை தகர்த்து எறிந்திட வேண்டும் திருஷ்டிப் பொட்டுக் கறுப்பு என்னும் மடமையை மாற்றிட வேண்டும் - அவள் மட்டந்தட்டும் மடையர்களின் கொட்டம் தட்டிட வேண்டும். துணிவின் உருவம் என்பவளாய்... அறிவின் கருவம் கொண்டவளாய்... வெள்ளை மோகம் வெல்பவளாய்... கறுப்புச் சரித்திரம் செய்பவளாய்... நிறபேதத்தைக் கொல்பவளாய்... நிறைய நிறைய கற்றவளாய்... நிமிர்ந்து எரியும் பெண்ணெருப்பாய்... படர்ந்து பரவும் சுடரொளியாய்... உலகே வியக்கும் ஊற்றறிவாய்... ஆகத்துடிக்கும் குணவதியாய்... செயலிற் கறுப்புப் பெண்புயலாய்... வராறுரைக்கும் மங்கையளாய்.. கறுப்பின் பொருளை மாற்றட்டும். கன்னியர் அவளைப் போற்றட்டும். மடமை இருளைப் போக்கட்டும். மனிதந்தன்னை நாட்டட்டும். கறுப்பு என்பதால் மணமாகாமல் முடங்கியோர் நிலை மாறட்டும். மனது என்பதே முக்கியம் எனும் மூலசூத்திரம் வெல்லட்டும். நிறங்கறுத்தவர் தலைகோணாமல் நிமிர்ந்து நேர்கொண்டு வாழட்டும். நீதிமறந்து கேலிசெய்வோரை உலகே கைகோர்த்துத் தூற்றட்டும். அன்பும், அறிவும், திறமையுமே பண்பு உள்ளவர் நோக்குவது, என்று அத்தனைப் பேரையுமே எந்த ஆட்சியில் ஆக்குவது? காண வேண்டி-ஓர் புரட்சிப்போர் பாக்கியிருக்குது தமிழச்சி எங்கிருக்கிறாய் உடனே வா ஏங்கியிருக்கிறாள் கறுப்பு மகள். கறுப்புத் தமிழன் -தமிழ் வசந்தன் |
Apr 27, 2012
கறுப்புத் தமிழச்சி வேண்டும்
குறிச்சொற்கள்
கறுப்பு,
தமிழச்சி,
தமிழ் மகள்,
திருஷ்டி,
முதிர்கன்னி,
வரதட்சணை