Jul 26, 2010

சுதந்திர தினச் சூளுரை



சாக்லேட் சாப்பிட்டதோடு
சரித்திரம் முடிந்துவிடாது
உணர்வில் ஏற்றி
உழைத்துப் பார்
உருக்கொள்ளும் நாடு

இலாபங்கண்டு வாழ்ந்தது போதும் - இது
லோகம் காணும் நேரம்
அள்ளித் தெளி - உன்
அறிவுச் செல்வத்தை

விழுந்துகிடக்கும்
முதுகெழும்பை
அடித்து நிமிர்த்தும்
ஆற்றல் நமக்குண்டு

கூடி முடிப்போம்
நாடு கொண்ட கடனை
இதுவே நம்
சுதந்திர தினச் சூளுரை

-தமிழ் வசந்தன்

Jul 24, 2010

ஆங்கில ஆசானுக்கு. . . .




இங்கே நான் ஏழை
அவன் ஏழை
இவன் ஏழை
நாங்கள் ஏழைகள்

பணத்தால் அல்ல
பாசத்தால் அல்ல
குணத்தால் அல்ல

அறிவால், கல்வியால் - இங்கே
செவிக்குணவில்லாதவர்கள் ஏழைகள்
புத்தகம் புரட்டாதவர்கள் ஏழைகள் - அந்த வகையில்
ஆங்கிலம் அறியாத பரம ஏழைகள் நாங்கள்

வகுப்பு போர்க்களம் - இங்கே
வாள் பேனா
ஏடு கேடயம்
வார்த்தைகள் அம்புகள்
வாய்ப்படுவது என்று ஆங்கிலம்

ராபர்ட் லூயி ஸ்டீவன்சனும்,
லியோ டால்ஸ்டாயும்,
ஷேக்ஸ்பியரும், விக்டர் ஹீகோவும்,
ஹெர்மன் ஹெஸ்ஸியும், ஹெர்மன் மெல்வினும்
பைரனும், செல்லியும், சார்லஸ் டிக்கன்சனும்

இன்னபிற பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
பாரதியார் சொன்னது போல்
தமிழில் பெயர்க்கும் ஆற்றல்
எங்களுக்கு எப்போது வரும்

காது திறந்திருக்கு ஊதுங்கள் சங்கை
நாங்கள் ஆங்கிலம் கற்றுக் கொள்கிறோம் என்று

காது திறந்திருக்கு ஊதுங்கள் சங்கை
நாங்கள் ஆங்கிலம் கற்றுவிட்டோம் என்று

காது திறந்திருக்கு ஊதுங்கள் சங்கை
எங்கள் நாவிலும் ஆங்கிலம் நணிவிளங்கும் என்று

ஐயா ஆசானே,
When I speak like this in ENGLISH?

-தமிழ் வசந்தன்

பேசுவேன்

நில்லாமல் பேசுவேன்
நிறுத்தாமல் பேசுவேன்
உண்ணாமல் பேசுவேன்
உறங்காமல் பேசுவேன்
குன்றாமல் பேசுவேன்
குறையாமல் பேசுவேன்

ஆதாரம் எடுத்து வைத்து
அறிவார்ந்து பேசுவேன்
அடித்தே கூறிடினும்
அடங்காமல் பேசுவேன்

இல்லாதோர் எழ வேண்டும்
இயலாதோர் எழ வேண்டும்
பொய்யர் பொல்லாதார் - என்
பேச்சுத் தீக்கிறையாவர்

மண்ணில் மடியுமென் சடலம் - ஆகினும்
விண்ணோடு ஒலிக்கும் - என்
வீரமிகு வசனம்


-தமிழ் வசந்தன்

சட்டச் சங்கிலிகள்

சபையேற தைரியமின்றி
சட்டச் சங்கிலிகளால்
கட்டிப் போட்டுவிட்டாய் - என்
கோபக் குமிழிகள்
கொதித்து அவிழ்கிற போது
எந்நாவும் புரளும்

-தமிழ் வசந்தன்

அன்பாயுதம் வளர்ப்போம்



தெருவிற்கொரு வெடிகுண்டு
கைக்கொரு துப்பாக்கி

பூக்கள் பகிர்ந்துகொண்ட
நாட்கள் குறைந்து போக. . . .
கதை முடிகிற காலம்
கனிவதைப் போல. . . .

விரியும் கவர்ச்சி வலையில்
விடுகதைகள் புதைந்திருக்க

கொலைக்கள பூமியில்
அடைக்கலம் புகுந்த இடமும்
கேள்விக்குரித்தாகிறது

ஆண்டவன் வருவது இருக்கட்டும்
அன்பாயுதம் வளர்ப்போம் - நம்
இதயக் கருவறையில்


-தமிழ் வசந்தன்

சமூகம் இளைப்பாறும்


என் பொறி பறக்கும் கருத்துக்களுக்கு
போர்வையே இல்லை - இவை
பரவும் எரிமலைகள்
கனன்றொரு நாள்
வெடிக்கும் - அன்று
சமூகம் இளைப்பாறும்

-தமிழ் வசந்தன்

புறப்படு நண்பா



நாட்டம் இருந்தால்
வானை வண்ணமயில் கூட
அறிந்துகொள்ள முடியும்

துணிந்து முயன்றால்
துன்பமெல்லாம்
துரும்புக்குச் சமானம்

நடந்து பயிலக் கூட
நம்பிக்கைத் தேவை

புறப்படு நண்பா
புலரக் காத்திருக்குது பூமி

-தமிழ் வசந்தன்

கருவேறிய தமிழ்க்கவிதைச் சேனைகள்



உன் பகைவருக்கும் பரப்பு
பரப்பும் ஊடகம் இலவச ஆயுதம்

எண்ணிக் கண்ணீர் வடி
ஏற்றுக் கொள்கிறேன்
பார்க்கத் தவிர்த்தால் - நீ
பயங்கொண்டதாய் பொருள்படும்

அடித்துக் கூறும் கருத்துக்களை
உண்ர்வுக்குள் உட்புகுத்தி
படித்துப் பதிலனுப்பு

இனி நீ கலங்க முடியாது - காரணம்
என் கருவேறிய தமிழ்க்கவிதைச் சேனைகள்
களமிறங்கிவிட்டன

-தமிழ் வசந்தன்

காலம் கரைகிறது நண்பா


வினைத்திறன் பெருக்கு

உயிர் களையும் முன்
உள்ளம் களைவது செய்

மிஞ்சி இருக்கும் நாட்களுக்குள்
இட்டபணி முடி
கொண்ட கடன் முடித்தால்
கோல் கோணாது வாழ்வாய்

உதிக்கும் சூரியன்
உன்னை அழைக்குது பார்
காலம் கழிகிறது நண்பா
கண்விழித்து விட்டாயா

-தமிழ் வசந்தன்

வாழ்க்கைக் கணக்கு


உழாமல் விளையாது பயிர்
தொழாமல் கிடைக்காது வரம்
எழாமல் தெரியாது உலகம்
வாழ்க்கை கொடுத்த
இந்த நாள் மர்மத்தில் எந்தப் புதையலோ
விடைக்குக் காத்திருக்கு அடுத்த கணக்கு
வென்று காட்டுவோம் உற்சாகமாய் உயிர் உசுப்பு
நாள் நமக்குத் தான்

-தமிழ் வசந்தன்

வா வாழலாம்



இடமறிந்து இட்டால்
பூஜியம் கூட
புதுமதிப்பு கொள்ளும்

புரட்சி மலர்வதற்கு
ஆயுதம் வெறும்
பேனா முனை தான்

அக்கினிக் கேள்விகளால்
வீழ்த்தும் நாவிற்கு
நரம்பே கிடையாது

இழந்தது போகட்டும்
இருப்பதைப் பொருட்படுத்து

உலகம் நமக்கும் உண்டு
வா வாழலாம்
-தமிழ் வசந்தன்

நட்பு



நான் உன் பிழை திருத்தும் எந்திரம்
என் சட்டை பிடித்து
குற்றம் களையும்
உரிமை உனக்குண்டு
உன் எந்தத் துயரத்தையும்
பகிர்ந்துகொள்ள நான் அனுமதி கேட்டு
நிற்க மாட்டேன்
என் இன்பத்தை
மறுத்தாலும் தருவேன்
காரணம். . . .
நமக்குள் இருப்பது
அசைக்க முடியாத நட்பு

-தமிழ் வசந்தன்