![]() | காலங்காலமாய் காவல்துறை அதிகாரிகள் நல்லவர்களாகவும், ரௌடிகள் கெட்டவர்களாகவும் தான் சித்தரிக்கப்படுகிறார்கள் சந்தர்ப்பவசத்தால் ரௌடிகளாகி மீளமுடியாத சூழலில் சிக்கிக்கொண்டு மனதுள் புழுங்கிக்கொண்டிருப்பவர்கள் உண்டு. |
அதிகாரமிருக்கின்ற ஆணவத்தில் பதவியை சுயநலத்திற்குப் பயன்படுத்திக்கொண்டு நேர்மையான நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டைகளாய் விளங்கும் காவல்துறை அதிகாரிகளும் உண்டு. இங்கே ஒன்றுமட்டும் தான் சாத்தியம் - அது தான் துரோகம். . . ஒரு நல்ல ரௌடி கெட்ட ரௌடிக்கும், ஒரு நல்ல அதிகாரி கெட்ட அதிகாரிக்கும் துரோகம் செய்வது மட்டும் தான் இங்கே சாத்தியம். எனக்கும் துரோகம் செய்தவர்கள் உண்டு. அவர்கள் எல்லோரும் துரோகத்தை அயோக்கியத்தனமாக பயன்படுத்தியிருப்பவர்கள். ஆனால், அது ஒரு சிறந்த ஆயுதம். எதனாலும் முடியாததை இது முடித்துவிடும். துரோகத்தால் மட்டும் தான் பெரிய நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்ட முடியும். துரோகங்கள் பலர் வம்சங்களை அழித்திருக்கின்றன! பல சாம்ராஜ்ஜியங்களை வீழ்த்தியிருக்கின்றன! வரலாற்றை மாற்றியும், உருவாக்கியும் இருக்கின்றன! நல்லவர்கள் இதைச் செய்யமாட்டார்கள் என்று கெட்டவர்கள் நம்புவதால் தான், கெட்டவர்கள் இதைச் செய்துவிட்டு புத்திசாலிகளாக(!)த் தங்களைக் காட்டிக்கொள்கிறார்கள். இனி நல்லவர்களும் துரோகம் செய்யுங்கள். நல்லவர்களுக்கு அல்ல. துரோகம் செய்யும் கெட்டவர்களுக்கு. . . ! ஒரு நல்லவர் கெட்டவர்க்கு செய்யும் ஒரே ஒரு துரோகம் ஒரு கெட்டவர் நல்லவர்களுக்குச் செய்யும் பல்லாயிரம் துரோகங்களிலிருந்து சமூகத்தைக் காப்பாற்றிவிடும். கெட்டவர்களுக்கு துரோகம் செய்கிறவர்கள் வரலாற்றில் துரோகிகளாக வர்ணிக்கப்பட்டதில்லை. வாலியை வீழ்த்திய ராமனும், மோகினியாய் அவதரித்த விஷ்ணுவும், கடவுளர்களாக்கப்பட்டிருக்கிறார்கள். உலகப்போரில் போர்க்களத்தின் முனையில் இந்திய வெள்ளையர் படையில் இருந்து கொண்டே வெள்ளையர்களை தாக்கி வீழ்த்திய நேதாஜி தன்னிகரில்லாத சுதந்திரப் போராட்ட வீரராகியிருக்கிறார். மாறாக சுயநலத்திற்காக துரோகம் செய்தவர்களை வரலாறு நிந்தித்திருக்கிறது. இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாஸின் முத்தம் அந்த ரகம். ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள் உங்கள் எதிரிக்குக் கூட துரோகம் செய்துவிடாதீர்கள். இரண்டு எதிரிகளுக்கு நடுவில் புல்லுருவிகளாய் இருப்பவர்கள் துரோகிகள்! அவர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்களுக்குத் துரோகம் செய்யுங்கள். அவர்கள் ஒழிந்தால் உங்களுக்கும் உங்கள் எதிரிக்குமான நேர்மையான போட்டிகளை நீங்கள் இருவருமே வெளிப்படையாக எதிர்கொள்ளலாம். முடிவில் எதிரிகளே நண்பர்களாகவும் மாறலாம். நீங்கள் துரோகிகளுக்குச் செய்யும் துரோகம் - துருவங்களைச் சமமாக்கும் ஆற்றலுடையது. எதிரிக்குக்கூட துரோகம் எண்ணாதவர் நல்லவர்தான் - ஆனால் கெட்டவர்களுக்கும், துரோகிகளுக்கும் துரோகம் செய்யாமல் இருந்துவிட்டால் அடுத்த தலைமுறை சமூகம் படவிருக்கும் கொடிய விளைவுகளுக்கு நாமும் காரணமாகிவிடுவோம். நன்மை ஒன்று நடக்கக் காலதாமதம் ஆவதில் கூட தவறேதும் இல்லை - ஆனால், கெட்டவர்கள் சுதந்திரமாக எந்த நெஞ்சுறுத்தலுமின்றி சீரழிவுகளை அரங்கேற்றிக் களியாட்டம் போடுவதற்கு அவ்வளவு எளிதில் இயன்றுவிடும் என்றால், இவர்களை நிறுத்த, ஒடுக்க, ஓட ஓட துரத்தியடிக்க பயன்படுகின்ற துரோகத்தை செய்யாமலிருப்பதும் மன்னிக்கமுடியாத குற்றமே! நீங்கள் கெட்டவர்களுக்குச் செய்கின்ற ஒவ்வொரு துரோகமும் சாத்தான் நுழைகிற வாயிற்கதவுகளை தாழிட்டுவிடுகின்ற பூட்டு! புறையோடிப்போன சமூக அவலங்களை எளிதில் களைகின்ற மாற்று! இதன் முடிவில் கெட்ட ரௌடிகளும், நேர்மையற்ற அதிகாரிகளும் ஒழிக்கப்பட்டுவிடுவார்கள். சூழற்கைதியாய் புழுங்கிக்கொண்டிருக்கும் நல்ல ரௌடிகளுக்கு அப்போது தான் விடிவுகாலம் பிறக்கும். நல்ல ரௌடிகளை நேர்மையான அதிகாரிகள் புரிந்துகொண்டுவிடுகின்ற நிலைமை உண்டாகும். அன்று தான் இந்தத் திருடன் போலீஸ் விளையாட்டு முடிவுக்கு வரும். நல்லதோர் சமூகம் உருவாகும். நல்லவர்களே. . . நண்பர்களே. . . ஆதலினால் துரோகம் செய்வீர்! பச்சை துரோகி, - தமிழ் வசந்தன் |
Jun 22, 2011
ஆதலினால் துரோகம் செய்வீர்
குறிச்சொற்கள்
அதிகாரி,
கெட்டவர்கள்,
சமூகம்,
துரோகம்,
நல்லவர்கள்,
ரௌடி
வரம் தா
![]() | வரமொன்று தா - நெஞ்சில் உரமென்று தா வஞ்சந்தனை வெல்லுந் திறமொன்று தா |
கொட்டுங்கொடுங் கோன்மை கொல்கின்ற போதும் - அதை முற்றும் எதிர்க்கின்ற மனமொன்று தா இன்னல் பலநூறு ஏற்கின்ற போதும் - உளம் சற்றும் சளைக்காத தினவொன்று தா வறுமை பிடித்தென்னை வருத்திட்ட போதும் - என் திறமை இருக்கென்ற உறுத்தொன்று தா எதையும் எதிர்கொண்டு போரிட்டு வெல்ல - என் இதயந் தயங்காத துணிவென்று தா உறவே உயிர்த்துரோகம் இழைத்தாலும் கூட - நான் எதற்குங் கலங்காத திடந்தன்னைத் தா நஞ்சை அமிழ்தென்று தந்தாலும் கூட - தெரிந்தும் அவர்க்காய் குடிக்கின்ற குணந்தன்னைத் தா காலம் குறைவாக வாழ்ந்தாலே போதும் - அதை வீணாய் கழிக்காத வினைதன்னைத் தா வீழும் உயிர் ஒன்றும் பல்லாண்டு வேண்டாம் - இவ் வையம் மறக்காத வாழ்வொன்று தா - தமிழ் வசந்தன் |
Subscribe to:
Posts (Atom)