Jul 5, 2014

சமத்துவம் முளைவிடும் தருணம்...



பணம்...

மனித்த்தைக் கழுவேற்றும்
மமதையூறும் மதுபானம்...

தன்னளவு கடந்து
தலைக்குள் புகுந்துகொண்டு
தரிகெட்டலையும் சுகவீனம்...

மமதை...

இல்லாதவர்களைக் கண்டு
எள்ளி நகையாடும்...

இயலாதவர்களைக் கண்டு
இழிவாய்ப் பரிகாசிக்கும்...

பிழைக்கவழியின்றி
பிச்சை கேட்பவர்களிடம்
காசைச் சுண்டியெறிந்து
கைகொட்டிச் சிரிக்கும்...

அண்டியவர்ளை எல்லாம்
நிரந்தர அடிமையாக்கும்...
மண்டியிடவைத்து
உள்ளம் குளிர்காயும்...

வன்புணர்வாய்க் கற்பழித்து
நெஞ்சுறுத்தல் ஏதுமின்றி
காசை விட்டெறிந்து
கண்டுகொள்ளாமல் கடந்துபோகும்...

கேட்பாரில்லையென்றால்
முதுகொடிய உழைத்தார்க்கு
கூலியே கொடுக்காமல்
ஏசியே விரட்டிவிடும்...

சட்டத்தை விலைக்கு வாங்கும்...
சமூகத்தை அடக்கி ஆளும்...

சுற்றத்தாரை எல்லாம்
சுயசிந்தனை அற்றோராய்
மடமை இருட்டுக்குள்
மாறாமல் வைத்திருக்கும்...

மிடிமை பீடித்த
இருண்மைச் சமூகத்தில்
விடிவெள்ளியாய் முளைக்கும்
சுயநலமற்ற போராளியால்

பணத்தாசைப் பெருச்சாலியை
புரட்சிக் குத்தீட்டி
குருதிதெரிக்க
கொன்று தீர்க்கும்.

கொடிய வரலாறு
முடிந்து போகும்.
அடிமை வர்க்கம்
விடியல் காணும்...

பணத்தை ஆளும் நிலையிலிருந்து
பணம் ஆளும் நிலைக்கு மாறும்
மனிதமற்ற மனிதர்களிடமிருந்து தான்
ஆரம்பமாகிறது...

இன்னுமொரு கம்யூனிசக் கோட்பாடு....!

-தமிழ் வசந்தன்