Apr 27, 2012

கறுப்புத் தமிழச்சி வேண்டும்


அடுக்கடுக்கடுக்காய் ஆங்கிலம் பேசும்
கறுப்புத் தமிழச்சி வேண்டும்.
இழுத்து மூடிய இரும்புத் திரையை
தகர்த்து எறிந்திட வேண்டும்

திருஷ்டிப் பொட்டுக் கறுப்பு என்னும்
மடமையை மாற்றிட வேண்டும் - அவள்
மட்டந்தட்டும் மடையர்களின்
கொட்டம் தட்டிட வேண்டும்.

துணிவின் உருவம் என்பவளாய்...
அறிவின் கருவம் கொண்டவளாய்...
வெள்ளை மோகம் வெல்பவளாய்...
கறுப்புச் சரித்திரம் செய்பவளாய்...

நிறபேதத்தைக் கொல்பவளாய்...
நிறைய நிறைய கற்றவளாய்...
நிமிர்ந்து எரியும் பெண்ணெருப்பாய்...
படர்ந்து பரவும் சுடரொளியாய்...

உலகே வியக்கும் ஊற்றறிவாய்...
ஆகத்துடிக்கும் குணவதியாய்...
செயலிற் கறுப்புப் பெண்புயலாய்...
வராறுரைக்கும் மங்கையளாய்..

கறுப்பின் பொருளை மாற்றட்டும்.
கன்னியர் அவளைப் போற்றட்டும்.
மடமை இருளைப் போக்கட்டும்.
மனிதந்தன்னை நாட்டட்டும்.

கறுப்பு என்பதால் மணமாகாமல்
முடங்கியோர் நிலை மாறட்டும்.
மனது என்பதே முக்கியம் எனும்
மூலசூத்திரம் வெல்லட்டும்.

நிறங்கறுத்தவர் தலைகோணாமல்
நிமிர்ந்து நேர்கொண்டு வாழட்டும்.
நீதிமறந்து கேலிசெய்வோரை
உலகே கைகோர்த்துத் தூற்றட்டும்.

அன்பும், அறிவும், திறமையுமே
பண்பு உள்ளவர் நோக்குவது,
என்று அத்தனைப் பேரையுமே
எந்த ஆட்சியில் ஆக்குவது?

காண வேண்டி-ஓர் புரட்சிப்போர்
பாக்கியிருக்குது தமிழச்சி
எங்கிருக்கிறாய் உடனே வா
ஏங்கியிருக்கிறாள் கறுப்பு மகள்.


கறுப்புத் தமிழன்
-தமிழ் வசந்தன்

Apr 24, 2012

நா காக்க... காவாக்கால்...


நாகரிமற்ற வார்த்தைகள்
நாவிலிருந்து விழுந்த போது
பொறுமையாய் இருந்து கொண்டேன்.

அமைதியின் பொருள்மறந்து - நீ
அபாண்டமாய் பேசிபோது
சமிக்ஞையாய் செய்தி சொன்னேன்.

புரிந்துகொள்ளும் புத்தியற்று
பொய்மேல் பொய் பொழிந்தபோது
போதுமென்று எச்சரித்தேன்.

எதையும் பொருட்கொள்ளாது
எள்ளிநகையாடிய போது
எளிமையாய் எடுத்துச் சொன்னேன்.

சற்றும் தயக்கமின்றி
சத்தியத்தை விற்ற போது
கடுமையாய் எதிர்த்துநின்றேன்

அதையும் அலட்சியித்து
அடுத்தடுத்து பிழையிழைத்து
எல்லை கடந்துவிட்டாய்

கர்வம் தலைக்கேறி
கண்ணியங் கெட்டழிந்து
வெறியால் ஆட்டமிட்டாய்

உன்னிப்பாய் நோக்குமிந்த
உலகின் நினைவகன்று
வரம்பை மீறுகின்றாய்

கண்கள் சிவந்திருக்க
உன்மேல் கனன்றிருக்க
இன்னும் சீண்டுகின்றாய்

இனியும் விட்டுவைத்தால்
இறைவன் இல்லையென்று
துணிந்தே தீங்கிழைப்பாய்

தணியாக் கோபமுற்று
தன்மையாய் போவமென்ற
உறுதியில் நானிருக்க...

இறுதியாய்ச் சொல்லுகிறேன்
இதுதான் மரியாதை
இத்தோடு நிறுத்திவிடு

உலகால் கட்டிவைத்து
தோலுரிக்கப்பட்டவர்கள்
சரித்திரம் படித்ததுண்டா...

ஊரே சேர்ந்துவந்து
உயிரோடு கொழுத்திவிட்ட
கனவான்கள் அறிந்ததுண்டா...

கடலின் அமைதிக்கும்
நிலத்தின் பொறுமைக்கும்
கோழை பொருளல்ல

கடைசி நினைவுறுத்தல்
கடைபிடிக்க மறவாதே
நா காக்க... காவாக்கால்....

-தமிழ் வசந்தன்

Jun 22, 2011

ஆதலினால் துரோகம் செய்வீர்

காலங்காலமாய் காவல்துறை அதிகாரிகள்
நல்லவர்களாகவும்,
ரௌடிகள் கெட்டவர்களாகவும் தான்
சித்தரிக்கப்படுகிறார்கள்

சந்தர்ப்பவசத்தால் ரௌடிகளாகி
மீளமுடியாத சூழலில் சிக்கிக்கொண்டு
மனதுள் புழுங்கிக்கொண்டிருப்பவர்கள் உண்டு.

அதிகாரமிருக்கின்ற ஆணவத்தில்
பதவியை சுயநலத்திற்குப் பயன்படுத்திக்கொண்டு
நேர்மையான நடவடிக்கைகளுக்கு
முட்டுக்கட்டைகளாய் விளங்கும்
காவல்துறை அதிகாரிகளும் உண்டு.

இங்கே ஒன்றுமட்டும் தான்
சாத்தியம் - அது தான்
துரோகம். . .

ஒரு நல்ல ரௌடி கெட்ட ரௌடிக்கும்,
ஒரு நல்ல அதிகாரி கெட்ட அதிகாரிக்கும்
துரோகம் செய்வது மட்டும் தான்
இங்கே சாத்தியம்.

எனக்கும் துரோகம் செய்தவர்கள் உண்டு.
அவர்கள் எல்லோரும் துரோகத்தை
அயோக்கியத்தனமாக பயன்படுத்தியிருப்பவர்கள்.

ஆனால், அது ஒரு சிறந்த ஆயுதம்.
எதனாலும் முடியாததை இது
முடித்துவிடும்.

துரோகத்தால் மட்டும் தான்
பெரிய நிகழ்வுகளை
நிகழ்த்திக் காட்ட முடியும்.
துரோகங்கள்
பலர் வம்சங்களை
அழித்திருக்கின்றன!
பல சாம்ராஜ்ஜியங்களை
வீழ்த்தியிருக்கின்றன!
வரலாற்றை மாற்றியும்,
உருவாக்கியும் இருக்கின்றன!

நல்லவர்கள் இதைச்
செய்யமாட்டார்கள் என்று
கெட்டவர்கள் நம்புவதால் தான்,
கெட்டவர்கள் இதைச்
செய்துவிட்டு புத்திசாலிகளாக(!)த்
தங்களைக் காட்டிக்கொள்கிறார்கள்.

இனி நல்லவர்களும்
துரோகம் செய்யுங்கள்.
நல்லவர்களுக்கு அல்ல.
துரோகம் செய்யும்
கெட்டவர்களுக்கு. . . !

ஒரு நல்லவர் கெட்டவர்க்கு செய்யும்
ஒரே ஒரு துரோகம்
ஒரு கெட்டவர் நல்லவர்களுக்குச் செய்யும்
பல்லாயிரம் துரோகங்களிலிருந்து
சமூகத்தைக் காப்பாற்றிவிடும்.
கெட்டவர்களுக்கு துரோகம் செய்கிறவர்கள்
வரலாற்றில் துரோகிகளாக
வர்ணிக்கப்பட்டதில்லை.

வாலியை வீழ்த்திய ராமனும்,
மோகினியாய் அவதரித்த விஷ்ணுவும்,
கடவுளர்களாக்கப்பட்டிருக்கிறார்கள்.
உலகப்போரில் போர்க்களத்தின் முனையில்
இந்திய வெள்ளையர் படையில் இருந்து கொண்டே
வெள்ளையர்களை தாக்கி வீழ்த்திய
நேதாஜி தன்னிகரில்லாத
சுதந்திரப் போராட்ட வீரராகியிருக்கிறார்.
மாறாக சுயநலத்திற்காக துரோகம் செய்தவர்களை
வரலாறு நிந்தித்திருக்கிறது.
இயேசுவை காட்டிக்கொடுத்த
யூதாஸின் முத்தம் அந்த ரகம்.

ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள்
உங்கள் எதிரிக்குக் கூட
துரோகம் செய்துவிடாதீர்கள்.
இரண்டு எதிரிகளுக்கு நடுவில்
புல்லுருவிகளாய் இருப்பவர்கள்
துரோகிகள்!
அவர்களை அடையாளம் கண்டுகொண்டு
அவர்களுக்குத் துரோகம் செய்யுங்கள்.
அவர்கள் ஒழிந்தால்
உங்களுக்கும் உங்கள் எதிரிக்குமான
நேர்மையான போட்டிகளை
நீங்கள் இருவருமே
வெளிப்படையாக எதிர்கொள்ளலாம்.
முடிவில் எதிரிகளே
நண்பர்களாகவும் மாறலாம்.
நீங்கள் துரோகிகளுக்குச் செய்யும்
துரோகம் - துருவங்களைச்
சமமாக்கும் ஆற்றலுடையது.

எதிரிக்குக்கூட துரோகம் எண்ணாதவர்
நல்லவர்தான் - ஆனால்
கெட்டவர்களுக்கும், துரோகிகளுக்கும்
துரோகம் செய்யாமல் இருந்துவிட்டால்
அடுத்த தலைமுறை சமூகம்
படவிருக்கும் கொடிய விளைவுகளுக்கு
நாமும் காரணமாகிவிடுவோம்.
நன்மை ஒன்று நடக்கக்
காலதாமதம் ஆவதில் கூட
தவறேதும் இல்லை - ஆனால்,
கெட்டவர்கள் சுதந்திரமாக
எந்த நெஞ்சுறுத்தலுமின்றி
சீரழிவுகளை அரங்கேற்றிக்
களியாட்டம் போடுவதற்கு
அவ்வளவு எளிதில்
இயன்றுவிடும் என்றால்,
இவர்களை நிறுத்த,
ஒடுக்க, ஓட ஓட துரத்தியடிக்க
பயன்படுகின்ற துரோகத்தை
செய்யாமலிருப்பதும்
மன்னிக்கமுடியாத குற்றமே!

நீங்கள் கெட்டவர்களுக்குச் செய்கின்ற
ஒவ்வொரு துரோகமும்
சாத்தான் நுழைகிற வாயிற்கதவுகளை
தாழிட்டுவிடுகின்ற பூட்டு!
புறையோடிப்போன சமூக அவலங்களை
எளிதில் களைகின்ற மாற்று!

இதன் முடிவில்
கெட்ட ரௌடிகளும்,
நேர்மையற்ற அதிகாரிகளும்
ஒழிக்கப்பட்டுவிடுவார்கள்.
சூழற்கைதியாய் புழுங்கிக்கொண்டிருக்கும்
நல்ல ரௌடிகளுக்கு
அப்போது தான்
விடிவுகாலம் பிறக்கும்.
நல்ல ரௌடிகளை
நேர்மையான அதிகாரிகள்
புரிந்துகொண்டுவிடுகின்ற
நிலைமை உண்டாகும்.
அன்று தான்
இந்தத் திருடன் போலீஸ்
விளையாட்டு
முடிவுக்கு வரும்.
நல்லதோர் சமூகம் உருவாகும்.

நல்லவர்களே. . .
நண்பர்களே. . .
ஆதலினால் துரோகம் செய்வீர்!
பச்சை துரோகி,
- தமிழ் வசந்தன்

வரம் தா

வரமொன்று தா - நெஞ்சில்
உரமென்று தா
வஞ்சந்தனை வெல்லுந்
திறமொன்று தா

கொட்டுங்கொடுங் கோன்மை கொல்கின்ற போதும் - அதை
முற்றும் எதிர்க்கின்ற மனமொன்று தா
இன்னல் பலநூறு ஏற்கின்ற போதும் - உளம்
சற்றும் சளைக்காத தினவொன்று தா

வறுமை பிடித்தென்னை வருத்திட்ட போதும் - என்
திறமை இருக்கென்ற உறுத்தொன்று தா
எதையும் எதிர்கொண்டு போரிட்டு வெல்ல - என்
இதயந் தயங்காத துணிவென்று தா

உறவே உயிர்த்துரோகம் இழைத்தாலும் கூட - நான்
எதற்குங் கலங்காத திடந்தன்னைத் தா
நஞ்சை அமிழ்தென்று தந்தாலும் கூட - தெரிந்தும்
அவர்க்காய் குடிக்கின்ற குணந்தன்னைத் தா

காலம் குறைவாக வாழ்ந்தாலே போதும் - அதை
வீணாய் கழிக்காத வினைதன்னைத் தா
வீழும் உயிர் ஒன்றும் பல்லாண்டு வேண்டாம் - இவ்
வையம் மறக்காத வாழ்வொன்று தா
- தமிழ் வசந்தன்

Jan 20, 2011

வாக்களியாதீர் - எங்கள் சின்னம் சவம்!


நாங்கள் ஆட்சிக்கு வந்தால். . .

பொதுச்சொத்தை நாசம் செய்பவர்கள்
கண்ட இடத்தில் சுடப்படுவார்கள்

லஞ்சம் வாங்குபவர்களுக்கு ஆயுளும்
கொடுப்பவர்களுக்குத் தூக்கும் விதிப்போம்

ஊழல் பெருச்சாலிகளை
உயிரோடு கொளுத்துவோம்

பாலியல் துன்புறுத்தல் செய்தால்
பாரபட்சமின்றி
கட்டிவைத்துத் தோலுரிப்போம்

நாதியற்று விடப்படும்
பெற்றவர்களின் பிள்ளைகளைச்
சோறுதண்ணீரின்றிச்
சாகடிப்போம்

கடத்தல் கும்பல்களெல்லாம்
பறிகொடுத்த மக்களாலேயே
கருணாகடாட்சமின்றி
காவுவாங்கப்படுவார்கள்

கலப்படம் செய்பவர்களானால்
கள்ளிப்பால் அவர்களின்
கடைசி உணவு.

வக்கிரம் பேசும் வாய்க்கு
மலமும், கழிவுமே இரை

வருமானவரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு
பணத்தில் சில்லரையைப் பிசைந்து
உணவாகத் தருவோம்

வறியவர்களிடம் தாட்டியங்காட்டி
உடைமைபறித்து கொட்டமடிப்பவர்கள்
மக்கள் நிறைந்த சதுக்கத்தின் வெளியில்
ரத்தவெறிபிடித்த நாய்களுக்கு நடுவே
நிராயுதபாணியாய் நிற்கவைக்கப்படுவார்கள்

குடித்துவிட்டு கொடுமைசெய்பவர்கள்
தயவுதாட்சணியமின்றி
நஞ்சு புகட்டிக் கொல்லப்படுவார்கள்.
மதுக்கடைகள் வெடிக்கிறையாகும்.

பணத்திற்காக சமூகத்தின்
ஒழுக்கத்தையும், கலாச்சாரத்தையுமே
சீரழிக்கத் துணிந்து
இளைய தலைமுறையிரிடம்
வக்கிரத்தைத் தாண்டவமாடச் செய்ய
துணைபுரியும் கனவான்களின்
தூக்கிலிடப்பட்ட நிர்வாணப்பிணங்கள்
சனங்களுக்கு நடுவே
கழுகுகளுக்கு விருந்தாகும்

 சட்டம் சாட்டையால் காக்கப்படும்

மதுக்கடை திறக்கவும்
அனுமதி வழங்கும்
ஜனநாயகத்தைவிட
மனசாட்சியுள்ள மனநாயகமாகத்தான்
எங்கள் ஆட்சி நடக்கும்

எங்கள் ஆட்சியில்
நல்ல ஓட்டுப்போடும் சுதந்திரம்
எல்லோருக்கும் உண்டு என்பதாலும்
கள்ள ஓட்டு போடுபவர்களின்
விரல்கள் நறுக்கப்படும் என்பதாலும்
நீங்கள் விரும்பும் சுயநல ஆட்சியை
மறுபடியும் தாராளமாகக்
தேர்ந்தெடுக்க முடியும்.
ஆனாலும், மறுபடியும்
ஒருநாள் நாங்கள்
ஆட்சிக்கு வருவோம் என்பதை
உறுதிபடச் சொல்கிறோம்.

எள்ளளவு ஐயமிருந்தாலும்
வாக்களியாதீர் - எச்சரிக்கை!
உங்கள் வீட்டிலும் 
குற்றவாளிகள் இருக்கலாம்!

-தமிழ் வசந்தன்

Jan 2, 2011

கண்ணீர் அஞ்சலி

என்ன நாளோ, என்ன நேரமோ
எதுவும் தெரியவில்லை
ஒரு நாள் நான் இறந்திருந்தேன்

ஊட்டி வளர்த்த பாட்டிக் கிழவிக்கு
முன்னோ, பின்னோ - நான்
மாண்டு போனதென்னவோ
மண்ணோடு தான்!

ஏதோ இயற்றிக்கொண்டிருந்தபோது
நான் இறந்துவிட்டிருக்கவேண்டும்
படைப்பில் கரைந்துகொண்டே
பாடையில் உறைந்திருக்கிறேன்(!)
இடையில் இறந்ததினால்
இறுதிவரை முடிக்கவில்லை
என்னவாய் இருந்திருக்கும் - என்
எழுதாத இறுதிவரி?

கடந்துபோன மரணங்களை எல்லாம்
நின்று பார்த்த அனுபவத்தில்
நின்று போன தருணத்தில்
நில்லாது போனவர்களை
என்னவென்று சொல்லுவது?

கைகொடுக்கையில்
கரந்தராதவர்கள். . .
பேசட்டும் பேசலாம்
என்றிருந்தவர்கள். . .
வணக்கம் வைத்தபோதும்
திரும்பிக்கொண்டவர்கள். . .  என்று
கொஞ்சங்கொஞ்சமாய் கழண்டுபோன
மனிதமற்ற சமூகத்தில்
வழிந்துவந்த ஜீவனொன்று - என்
வலதுகை மோதிரத்தை
வாரிச்சுருட்டி செல்லலாக. . .

இறந்துவிட்ட சேதிகேட்டு
பிரிந்தோரெல்லாம் கூடினார்கள் - இதில்
துயருண்டோர் எவரெவரோ?
துள்ளலுற்றோர் எவரெவரோ?

ஏழைப்படைப்பாளனாய்
பலரைப் பகைத்திருந்தேன்
ஆட்கள் வந்தனரா?
அனாதையாய் கிடந்தேனா?
தூக்கிப் போடமட்டும்
யாரோ நாலுபேரை
எங்கெங்கிருந்தோ - நான்
சம்பாதித்திருக்கின்றேன்

விறகா, மின் தகனமா
எதுவென்றறியேனே
தீவைத்து மூட்டினார்கள்
சுரனையே எனக்கில்லை
ஒருவேளை இருந்திருந்தால்
கத்தியே இருக்கமாட்டேன்
சத்தியமாய் சொல்லுகிறேன்
சந்தோசமாய் செத்திருப்பேன்

-தமிழ் வசந்தன்
01.01.2011

Aug 7, 2010

துருவங்கள்

நீ என்னை முடக்குகிறாய்
நான் உன்னை முடக்குகிறேன்

என் முடிதல்கள் எல்லாம்
உன்னால் முடக்கப்படும்

உன் முடிதல்கள் எல்லாம்
என்னால் முடக்கப்படும்

வெறிபிடித்த
வாழ்க்கைக் குதிரைகளில்
முடித்தலும், முடக்கலுமாக
நம் வழி

இவற்றிற்கான
கொடுக்கல் வாங்கல்களிலேயே
நம் பரஸ்பரம்

இந்தப் பிறவியில்
நாம் எதிரிகள் என்பதே
நிச்சயிக்கப்பட்ட உண்மை

நீயும், நானும்
விரும்பினாலும், விலகுதலே
கட்டாயமான முடிவு

நீர் விரும்பினாலும்
எரிய முடியாது
நெருப்பு விரும்பினாலும்
குளிர முடியாது

ஒளியோ, இருளோ
விரும்பினாலும்
ஒன்றை மற்றொன்று
அடைய முடியாது

'நண்பா'

வெற்றியோ, தோல்வியோ
தொடரட்டும் நம் யுத்தம்

சந்திக்கலாம்
பிறவி முடியட்டும்!

- தமிழ் வசந்தன்

சுவடு



நின்று போன
மழைக்குப் பின். . .

தொங்கும்
தந்திக் கம்பித் துளிகளில். . .

வந்து சென்ற வானவில்லின். . .

நிறச்சிதறல்கள்!

- தமிழ் வசந்தன்

உண்மை


ஓவியம் வரைந்திருந்தேன்
இரசிக்க முடிவில்லையென்று
இருட்டைத் திட்டினார்கள்

ஒளிவந்து
உணர்த்திவிட்டுப் போனது
திட்டப்பட்டது தான்
தீட்டப்பட்டிருக்கிறது
என்பதை!

- தமிழ் வசந்தன்